ரயில் பகிஷ்கரிப்பு; சட்டமா அதிபரின் ஆலோசனை

ரயில்வே ஊழியர்களின் பகிஷ்கரிப்பு குறித்த விசாரணைக்கு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

by Staff Writer 02-07-2019 | 1:43 PM
Colombo (News 1st) ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்திய நிலையில், ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரிடம் மாத்திரம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களின் தலைவர்களிடம் எதிர்வரும் நாட்களில், வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, அத்தியாவசிய சேவைச் சட்டத்திற்கமைய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை, தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் வரை பிரதி வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வௌ்ளிக்கிழமை நள்ளிரவு வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளன. எனினும், ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலைப் பொருட்படுத்தாது ரயில்வே ஊழியர்கள் கடந்த வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ஏனைய செய்திகள்