ஈரான் நெருப்புடன் விளையாடுவதாக ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரான் நெருப்புடன் விளையாடுவதாக ட்ரம்ப் தெரிவிப்பு

by Staff Writer 02-07-2019 | 8:24 AM
Colombo (News 1st) ஈரான் நெருப்புடன் விளையாடுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பு 300 கிலோகிராமை எட்டியுள்ளதாக ஈரான் நேற்று அறிவித்ததை அடுத்தே அமெரிக்க ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வரம்பை ஈரான் மீறியதை சர்வதேச கண்காணிப்பகமும் உறுதி செய்துள்ளது. 300 கிலோகிராமுக்கு மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வைத்திருக்கக்கூடாது எனும் ஒப்பந்தம் மீறப்பட்டதை தனது மேற்பார்வையாளர்கள் உறுதி செய்துள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம், செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை ஈரான் மும்மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு செறிவூட்டப்பட்ட யூரேனியமே அணு உலைகளுக்கு எரிபொருளாகவும், அணு ஆயுத தயாரிப்பிலும் பயன்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஒப்பந்தத்தை கைவிட்டு மீண்டும் பொருளாதார தடைகளை விதித்துள்ள சூழலில் அதற்கு பதிலடியாக ஈரான் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.