இலட்சிய வரம் 2019 புலமைப்பரிசில் செயற்றிட்டப் பயணம் ஆரம்பம்

by Staff Writer 02-07-2019 | 9:17 PM
Colombo (News 1st) ''இலட்சிய வரம் - ஆற்றல்களின் சந்ததிக்கான மகுடம்'' புலமைப்பரிசில் செயற்றிட்டப் பயணம் இன்று கதிர்காமத்தில் ஆரம்பித்தது. அங்கர் மற்றும் சாம்பியன்ஸ் நெட்வர்க் ஆகியன ஒன்றிணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன. எதிர்காலம் குறித்த கனவுடன் காத்திருக்கும் பிள்ளைகளை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தப் பயணம் கதிர்காமத்தில் இன்று ஆரம்பமானதுடன், நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர். நியூஸ்ஃபெஸ்ட் மற்றும் அங்கர் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர். கதிர்காமம் மற்றும் செல்லக்கதிர்காமத்தைக் கடந்து வாகனத்தொடரணி புத்தலவை சென்றடைந்தது. மொனராகலை ஸ்ரீ சுபோத கனிஷ்ட வித்தியாலயம், வகுருவெல மகா வித்தியாலயம், ரோயல் கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் இன்று தெளிவுபடுத்தப்பட்டனர். இதன்போது, விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்பட்டன. இதனையடுத்து, இந்த செயற்றிட்டம் தொடர்பில் புத்தல நகர மக்கள் தெளிவுபடுத்தப்பட்டனர். 12 முதல் 18 வயதிற்குட்பட்ட சகல பாடசாலை மாணவர்களும் இந்த புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும். முதல் கட்டத்தில் 10 பிரிவுகளின் கீழ் 250 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். கல்வி, புத்தாக்கம், தலைமைத்துவம், முகாமைத்துவம், முயற்சியாண்மை, விளையாட்டு, தனித்துவத்திறன், அழகியல், ஊடகம், டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய 10 பிரிவுகளின் கீழ் மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். திறன்களை மதிப்பீடு செய்வதற்காக 50 பேரைக்கொண்ட நிபுணத்துவ நடுவர் குழாத்தின் உதவியைப் பெற எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 'இலட்சிய வரம் 2019' தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவன கேட்போர் கூடத்தில் நேற்று (01) நடைபெற்றது.