மரணதண்டனைக்கு எதிராக 12 அடிப்படை உரிமை மனுக்கள்

மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்

by Staff Writer 01-07-2019 | 4:52 PM
Colombo (News 1st) மரணதண்டனையை அமுல்படுத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினத்தில் மாத்திரம் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு மாத்திரம் மரணதண்டனையை அமுல்படுத்த ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தினால் தமது மற்றும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக கட்டளையிடுமாறு கோரி, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பேராசிரியர் சீ. குணசேகர உள்ளிட்ட 10 தரப்பினரால் இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளில் பலர் உள்ள நிலையில், தெரிவுசெய்யப்பட்ட ஹெரோயின் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதன் ஊடாக அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சர் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோர் மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.