போதைப்பொருள் வாரம் இன்றுடன் பூர்த்தி

போதைப்பொருள் வாரம் இன்றுடன் பூர்த்தி

by Fazlullah Mubarak 01-07-2019 | 8:45 AM

தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் இறுதித் தினம் இன்றாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஒன்றுகூடல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

போதையிலிருந்து சுதந்திரமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் கடந்த 23ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதன் பிரதான ஒன்றுகூடல் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது. ஜூன் 26ஆம் திகதி பெயரிடப்பட்டிருந்த போதைப் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிராக சர்வதேச தினத்திற்கு இணைவாக ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மற்றும் தொழிற்கல்வி பெறும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை இலக்காகக் கொண்டு நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, போதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி, அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசியசபை மற்றும் இலங்கை பொலிஸ் இணைந்து முன்னெடுக்கும் போதைப்பொருள் பரவல் தொடர்பிலான தேசிய கருத்துக்கணிப்பும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இன்றைய ஒன்றுகூடலில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு அலுவலகம் தொடர்பில் மக்கள் நம்பகத்தன்மையை ஸ்தாபிப்பதற்கு வழக்குகள் முடிவடைந்த 1695 கிலோ சட்டவிரோத போதைப்பொருள் பகிரங்கமாக அழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை பல்வேறு வகை 24818 கிலோ 395 கிராம் 767 மில்லி கிராம் விஷ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.