நிதி நிறுவனமொன்றில் கொள்ளையிட்ட இருவர் கைது

அக்குரஸ்ஸ நிதி நிறுவனமொன்றில் 29 இலட்சம் ரூபாவை கொள்ளையிட்ட இருவர் கைது

by Staff Writer 01-07-2019 | 5:53 PM
Colombo (News 1st) அக்குரஸ்ஸ பகுதியிலுள்ள நிதி நிறுவனமொன்றில் 29 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நிதி நிறுவனத்தை கொள்ளையிட்டு தப்பிச்செல்வதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸ் அதிகாரிகளின் குழுவொன்று சந்தேகநபர்களை துரத்திச்சென்று கைது செய்துள்ளனர். குறித்த நிதி நிறுவனத்திலிருந்து கொள்ளையிடப்பட்ட 29 இலட்சம் ரூபா பணம் மற்றும் நாட்டு துப்பாக்கி ஒன்றும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 32 மற்றும் 35 வயதுடைய ஹக்மன மற்றும் திக்வெல்லவைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து கொள்ளைக்கு உதவிபுரிந்த நிதி நிறுவனத்தின் ஊழியர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஊழியரிடம் இருந்து பெறப்பட்ட தகவலுக்கமைய வெலிகம பகுதியில் இருந்து மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி நிறுவனத்தில், தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.