தேர்தல் தாமதமாவதற்கு அரசு பொறுப்பு கூற வேண்டும்

பாராளுமன்றத்தின் அலட்சியமே மாகாண சபைத் தேர்தலின் தாமதத்திற்கு காரணம் - தேர்தல்கள் ஆணைக்குழு

by Staff Writer 30-06-2019 | 8:58 AM
Colombo (News 1st) பாராளுமன்றம் மற்றும் நிறைவேற்றதிகாரம் ஆகியவற்றின் அலட்சியமே மாகாணசபைத் தேர்தல் தாமதமடைவதற்கான காரணம் என, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதைப் போன்று, மாகாணசபைத் தேர்தல் தாமதமடைவதற்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டுமே தவிர அதிகாரிகள் இல்லை எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு பாராளுமன்றம், அமைச்சரவை ஆகியன இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில், மாகாண சபை தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை வௌியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலானது, நவம்பர் மாதத்தின் இறுதி வாரங்களில் அல்லது டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் நடாத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபை தேர்தலை முதலில் நடத்தினால் ஜனாதிபதி தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படும் என சிலர் கருத்துக்களை முன்வைத்தாலும் , அவ்வாறு எந்தவொரு தடைகளும் ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.