by Staff Writer 30-06-2019 | 7:40 AM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது.
போட்டியில் பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 228 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டதுடன், அந்த இலக்கை நோக்கி பாகிஸ்தான் கடைசி ஓவரின் நான்காவது பந்தில் கடந்தது.
இறுதிவரை களத்தில் நின்ற இமாட் வசீம் 49 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்தார்.
லீட்ஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தடுமாற்றமான ஆரம்பத்தைப் பெற்றதோடு 57 ஓட்டங்ளுக்கு முதல் 3 விக்கெட்களையும் இழந்தது.
ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்களை பெற்றது.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தானும் ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாற்றமடைந்தது.
முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் 81 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்களையும் இழந்தது.
பாகிஸ்தான் அணி 2 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
இந்த வெற்றியின் மூலம் தொடரில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் அணி 9 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்திலுள்ளது.
இதேவேளை, நியூஸிலாந்து அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக உஸ்மான் கவாஜா 88 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட், ஹெட்ரிக் சாதனையை நிகழ்த்தி 4 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.
உலகக்கிண்ண போட்டிகளில் முதலாவது ஹெட்ரிக் சாதனை புரிந்த முதலாவது நியூஸிலாந்து வீரராக ட்ரென்ட் போல்ட் பதிவானார்.
இதேவேளை, 244 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு களமிறங்கிய நியூஸிலாந்து அணியினால் 157 ஓட்டங்களையே பெற முடிந்தது.
43.4 ஓவர்களில் நியூஸிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
மிட்சல் ஸ்டார்க் 5 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.