சீல் வைக்கப்பட்ட களஞ்சியசாலை மீது சட்ட நடவடிக்கை எடுப்பதை முசம்மில் தடுத்ததாக குற்றச்சாட்டு

by Staff Writer 29-06-2019 | 7:13 PM
Colombo (News 1st) பியகம - மாபிம பகுதியில் நுகர்விற்கு உதவாத தானியங்களைக் கொண்டிருந்த களஞ்சியசாலை மீது சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுப்பதற்கு மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மில் நடவடிக்கை எடுத்ததாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. கடந்த 25 ஆம் திகதி நூர் மொஹமட் மொஹமட் சித்திக் எனும் நபருக்கு உரித்தான களஞ்சியசாலையை பரிசோதனைக்கு உட்படுத்திய போது நுகர்விற்கு உதவாத சுமார் 7,58,000 ஆயிரம் கிலோகிராம் தானியங்கள் கைப்பற்றப்பட்டதாக குறித்த சங்கம் அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மாகொல்ல தெற்கு மற்றும் ஹெய்யன்துட்டுவ பொது சுகாதார பரிசோதகர்களினால் குறித்த களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டது. நுகர்விற்கு உதவாத பருப்பு, பாசிப்பருப்பு, கௌப்பி ஆகியன அதில் அடங்குவதுடன், அவற்றில் வண்டுகள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மில், சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அச்சுறுத்தல் விடுத்ததாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.