சம்பள முரண்பாடு: அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானம்

by Staff Writer 29-06-2019 | 8:30 PM
Colombo (News 1st) சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட நான்கு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன. அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் ஒன்றியம் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இதனை அறிவித்தது. சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் விடுத்தல், கல்விக்கு 6 வீதத்தை ஒதுக்குதல், 2015 ஆம் ஆண்டு இரத்து செய்யப்பட்ட விதவை மற்றும் அநாதரவற்ற பிள்ளைகளின் ஓய்வூதியத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் மற்றும் பிள்ளைகளின் கல்விக்கு இடையூறாக இருக்கும் தேவையற்ற ஆவணங்களை நிரப்பும் செயற்பாட்டை இல்லாமல் செய்தல் ஆகிய நான்கு விடயங்கள் தொடர்பில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அனைத்து ஆசிரிய சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஷெஹான் திசாநாயக்க தெரிவித்தார். அதற்கமைய, 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் நாடளாவிய ரீதியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலைகளின் இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள், சுமார் 15 ஆயிரம் அதிபர்கள் இரண்டு நாள் சுகயீன விடுமுறையை பெற்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.