மருத்துவர் சாஃபியின் கைதின் போது பொலிஸாரால் தவறு இழைக்கப்பட்டுள்ளது: குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவிப்பு

மருத்துவர் சாஃபியின் கைதின் போது பொலிஸாரால் தவறு இழைக்கப்பட்டுள்ளது: குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Jun, 2019 | 8:03 pm

Colombo (News 1st) குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் மொஹமட் சாஃபி சஹாப்தீனை கைது செய்யும் போது பொலிஸாரினால் தவறு இழைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்த போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவர் மொஹமட் சாஃபி சஹாப்தீனை பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவிப்பதற்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய மருத்துவர் மொஹமட் சாஃபி சஹாப்தீன் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாதக் குழுவிடம் பணம் பெற்று அந்தக் குழுவின் நோக்கங்களை நிறைவேற்றியமை மற்றும் அந்த நிதியூடாக சொத்துகளை கொள்வனவு செய்தமை, பிரதேசத்தில் காணப்படும் அமைதியற்ற நிலைமையில் இனங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கும் உத்தரவிற்கமைய அவரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் B-210 அறிக்கையுடன் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

எனினும், மருத்துவருக்கு பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையதாக தெரியவரவில்லை என B அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் சந்தேகநபர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்துக்களை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது முறையற்ற வகையில் பணம் சம்பாதித்துள்ளமை குறித்து தெரியவரவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மருத்துவர் மொஹமட் சாஃபி சஹாப்தீன் தொடர்ந்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் அடுத்த மாதம் 11 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
contac[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்