முறிகள் மோசடி: அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

by Staff Writer 28-06-2019 | 3:38 PM
Colombo (News 1st) முறிகள் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் ஜோசப் அலோசியஸ் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரினால் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா சாந்தனி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த குற்றப்பத்திரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதிகளை எதிர்வரும் 19 அம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிராக 23 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி இடம்பெற்ற முறிகள் ஏலத்தின் போது, 10,058 பில்லியன் ரூபா திறைசேரி முறிகளை மோசடியான முறையில் கையாண்டு, சதி முயற்சியில் ஈடுபட்டமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிமை உள்ளிட்ட விடயங்களும் குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. பொது சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணப்படும் சரத்திற்கு அமைய, முறையற்ற கையாளுகை குற்றத்தின் கீழ் அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திறைசேரியின் 10,058 பில்லியன் ரூபா பெறுமதியான முறிகளை விநியோகிக்கும்போது, நம்பிக்கையை சீர்குலைத்து 688 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் அர்ஜூன மகேந்திரன் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன், பத்தினிகே சமரசிறி, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம், அர்ஜூன் ஜோசப் அலோசியஸ், கசுன் பாலிசேன, ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ், டி.மித்ரா குணவர்தன, சி.ரஞ்சன் ஹூலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன் மற்றும் ஆஜான் புஞ்சிஹேவா ஆகியோருக்கு எதிராகவே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.