மில்ஹான் வழங்கிய தகவல்களுக்கு அமைய காத்தான்குடியில் இன்றும் சோதனை

by Staff Writer 28-06-2019 | 8:23 PM
Colombo (News 1st)  காத்தான்குடி - ஒல்லிக்குளம் பகுதியிலுள்ள காணியொன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்றும் சோதனையில் ஈடுபட்டனர். ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சந்தேகநபர்களுள் ஒருவரான ஹயாது மொஹமட் அஹமட் மில்ஹான் வழங்கிய தகவல்களுக்கமையவே இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது. துபாயின் ஜெட்டாவிலிருந்து அழைத்துவரப்பட்ட சந்தேகநபரான மில்ஹான், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் காத்தான்குடிக்கு நேற்று (27) அழைத்துச்செல்லப்பட்டார். சந்தேகநபரான மில்ஹான் வழங்கிய தகவல்களை அடுத்து ஒல்லிக்குளம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டன. 369 ஜெலட்னைட் குச்சிகள், 30 வாள்கள், 1500 டெட்டனேட்டர் குச்சிகள், 10 கிலோகிராமிற்கும் அதிக திரவ ஜெலட்னைட், 210 அடி டெட்டனேட்டிங் வயர்கள், 475 T56 ரக துப்பாக்கி ரவைகள், விமான அழிப்பு வல்லமையுள்ள 11 ரவைகள் ஆகியன இதன்போது மீட்கப்பட்டதாக பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதேவேளை, பயங்கரவாதக் குழுவினர் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் ஒல்லிக்குளம் பகுதியில் இன்றும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, ஒருதொகை வாள்கள் கைப்பற்றப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவுடைய இந்தக் காணி, சஹ்ரான் பயங்கரவாதக் குழுவினர் பயிற்சி பெறுவதற்குப் பயன்படுத்திய இடம் என சந்தேகிக்கப்படுகின்றது.