by Staff Writer 28-06-2019 | 7:32 PM
Colombo (News 1st) மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 02 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜயசிறி தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்கிய உறுதிமொழியை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் ஒரு வாரம் நிறைவு பெறும் வரை எந்தவொரு குற்றவாளிக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உறுதியளித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோத்தாகொட மற்றும் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர ஆகியோரால் கேட்கப்பட்ட வினாவிற்கு பதில் வழங்கும் வகையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் மாலிந்த செனவிரத்ன இன்று முற்பகல் மனு தாக்கல் செய்தார்.
46 வருடங்களாக அமுலில் காணப்படாத மரண தண்டனையை அவசரமாக அமுல்படுத்த ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தினூடாக பல்வேறு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால் அதனை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு நீதிமன்றத்திற்கு காணப்படக்கூடிய அதிகாரம் தொடர்பில் அடிப்படை எதிர்ப்பு மனுவை சமர்ப்பிப்பதாக அரச பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நெரியன் பிள்ளே மன்றுக்கு அறிவித்துள்ளார்.