ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2019 | 3:18 pm

Colombo (News 1st) அத்தியாவசிய சேவையாக ரயில் சே​வையை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதன் பிரகாரம், அவசர சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், நாட்டின் 7 பகுதிகளில் இருந்து 7 ரயில்கள் கோட்டை ரயில் நிலையம் நோக்கி பயணித்துள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

வார நாட்களில் காலை வேளையில் 48 ரயில் சேவைகள் இடம்பெறுகின்ற போதிலும், பணிப்பகிஷ்கரிப்பினால் 7 ரயில் சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களின் உதவியுடன் இன்று மாலை அதிகமான ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

ரயில்வே சேவையின் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமையால் ரயில்வே தொழிற்சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை, ரயில் நிலையங்களில் பயணப் பற்றுச்சீட்டு வழங்குமிடம், கட்டுப்பாட்டறை ஆகியவற்றின் பாதுகாப்பு இன்று பலப்படுத்தப்பட்டிருந்தது.

காலை 5 மணிக்கு கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் நோக்கிப் பயணித்த ரயிலில் பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்படவில்லை.

இதேவேளை, தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் வரை பிரதி வியாழக்கிழமைகளில் நள்ளிரவு முதல் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்