திருமலையில் மணல் அகழ்விற்கான அனுமதிப்பத்திரங்கள்

திருகோணமலையில் மணல் அகழ்விற்கான 311 அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை

by Staff Writer 27-06-2019 | 1:49 PM
Colombo (News 1st) திருகோணமலை மாவட்டத்தில், மணல் அகழ்வதற்காக 311 அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மணல் அகழ்விற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என, பணியகத்தின் தலைவர் அசேல இத்தவல தெரிவித்துள்ளார். இதன்படி, ஆற்று மணலுக்கு நிலவும் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நிர்மாணப் பணிகளுக்காக 25000 கியூப் மணல் சந்தைகளுக்கு கிடைக்கவுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில், திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்விற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. திருகோணமலை மாவட்டத்தில் மஹாவெலி ஆற்றை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அகழ்வு நடவடிக்கைகள் காரணமாக, சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், மஹாவெலி கங்கையின் கந்தளாய் பகுதியிலிருந்து மூதூர் வரையான பகுதிக்குள், சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மணல் அகழ்வதற்காக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.