மாலைத்தீவு தூதரகத்தில் பதுங்கியிருந்த சந்தேகநபர்

சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் நபர் கொழும்பிலுள்ள மாலைத்தீவுகளின் தூதரகத்தில் பதுங்கியிருந்ததாக தகவல்

by Staff Writer 27-06-2019 | 8:03 PM
Colombo (News 1st) மாலைத்தீவு பிரஜைகள் 19 பேர் படுகொலை செய்யப்பட்ட 1988 ஆம் ஆண்டு சதித்திட்டத்தின் சூத்திரதாரியான அப்துல்லா லுத்ஃபி இரண்டு மாதங்களாக கொழும்பிலுள்ள மாலைத்தீவுகளின் தூதரகத்தில் தங்கியிருந்ததாக தகவல் வௌியாகியுள்ளது. லுத்ஃபி மே மாதம் முதலாம் திகதி தூதரகத்தில் சரணடைந்ததாக அந்நாட்டு பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சந்தேகநபர் தற்போது தங்கியுள்ள இடம் தொடர்பாக எவ்வித தகவலும் வௌிவரவில்லை. ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் பாதுகாப்புத் தரப்பினர் தேடுதல் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் அப்துல்லா லுத்ஃபி மாலைத்தீவுகள் அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளார். லுத்ஃபி தூதரகத்தில் மறைந்துள்ளதாக மாலைத்தீவுகளின் முன்னாள் உள்துறை அமைச்சர் உமர் லத்தீஃப் ட்விட்டரில் பதிவிட்டதன் பின்னர் இந்த விடயம் அம்பலமானது. இந்த விடயம் தொடர்பில் மாலைத்தீவுகளின் தூதரக அலுவலகத்திடம் வினவியபோது, தகவல் எதனையும் வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அப்துல்லா லுத்ஃபியை 24 மணித்தியாலங்களுக்குள் மாலைத்தீவுகளுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக அந்நாட்டு பொலிஸ் ஆணையாளர் மொஹமட் ஹமீட் கடந்த செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார். அப்துல்லா லுத்ஃபியை மாலைத்தீவுகளுக்கு அழைத்து வருவதற்காக இலங்கை அதிகாரிகளுடன் மாலைத்தீவுகள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக குறித்த பொலிஸ் அதிகாரியை மேற்கோள்காட்டி மாலைத்தீவுகளின் ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன. எவ்வாறாயினும், லத்ஃபியை மீண்டும் அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மாலைத்தீவுகளின் பொலிஸ் ஆணையாளர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகளிடம் பாதுகாப்பைக் கோரும் வகையில் அவர் வைத்திருந்த சில ஆவணங்களே இதற்கு காரணமாகும். அப்துல்லா லுத்ஃபியை மீண்டும் அந்நாட்டிற்கு அழைத்துச் செல்வதில் தடைகள் உள்ளமையை மாலைத்தீவுகளின் வௌிவிவகார அமைச்சர் நேற்று விடுத்த அறிக்கை உறுதிப்படுத்தியது. குறித்த சந்தேகநபர் தொடர்பில் இலங்கை பொலிஸாருக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவிடம் வினவியபோது தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதிகளை பாதுகாப்பதற்காக மாலைத்தீவுகள் தூதரகம், தூதரகத்திற்கான சிறப்புரிமைகளை பயன்படுத்தியதா என்பதை அறிவதற்காக வௌிவிவகார அமைச்சை தொடர்புகொள்வதற்கு மேற்கொண்ட முயற்சி கைகூடவில்லை. 1988 ஆம் ஆண்டு மாலைத்தீவுகளின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அப்துல்லா லுத்ஃபி உள்ளிட்ட குழுவினர் சதித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியதுடன் இந்த இராணும் தலையீடு செய்து அதனை முறியடித்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள லுத்ஃபி 2009 ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியாவிற்கு சென்றுள்ளதுடன், 2010 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த அவர் அன்று முதல் இந்த வருடத்தின் மே மாதம் வரை வேறு ஒரு பெயரில் இலங்கையில் மறைந்திருந்தமை தெரியவந்துள்ளது. இவரை கைது செய்வதற்காக 2012 ஆம் ஆண்டு சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தலை பிறப்பித்திருந்தனர்.