யாழ். பல்கலை மாணவர்கள் சுட்டுக்கொலை: 2 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு அறிவிப்பு

யாழ். பல்கலை மாணவர்கள் சுட்டுக்கொலை: 2 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Jun, 2019 | 3:48 pm

Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் ஏ.எஸ். பீட்டர்போல் இன்று இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரண்டு பிரதிவாதிகளுக்கும் எதிரான சாட்சியங்கள் போதுமானதாக இருப்பதால், குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்காக சட்ட மா அதிபரிடம் வழக்கை ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எனினும், இரண்டு பிரதிவாதிகளும் தொடர்ந்தும் பிணையில் இருக்க முடியும் எனவும் நீதவான் இன்று அறிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களில் மூவர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்கள் அரச தரப்பு சாட்சியாளர்களாகியுள்ளனர்.

இந்த வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ள முதலாவது மற்றும் மூன்றாவது பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்று கட்டளைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் இன்று மன்றில் ஆஜராகியிருந்தார்.

பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்காக வழக்கை சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்குமாறு யாழ். நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்