by Staff Writer 27-06-2019 | 8:14 AM
Colombo (News 1st) நாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 458 கைதிகள் உள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களின் 30க்கும் மேற்பட்டவர்கள் போதைப்பொருள் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக 720 கைதிகள் மேன்மூறையீடு செய்துள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு மேன்முறையீடு செய்துள்ள கைதிகளைத் தவிர, போதைப்பொருள் குற்றச்சாட்டினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட 18 கைதிகள் உள்ளனர்.
இதில் பெண்ணொருவரும் அடங்குகின்றார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் 4 பாகிஸ்தானிய பிரஜைகள் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், போதைப்பொருளுடன் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் தாம் கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (26ஆம் திகதி) கூறியிருந்தார்.
போதைப்பொருள் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 18 பேரில் நால்வருக்கே இவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மரணதண்டனை நிறைவேற்றப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அலுகோசு பதவிக்காக இருவர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.