SOFA மற்றும் அமெரிக்க இராணுவம் இலங்கையில் நிலைகொள்ளும் உடன்படிக்கைகளுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு

by Staff Writer 26-06-2019 | 8:14 PM
Colombo (News 1st) SOFA மற்றும் அமெரிக்க இராணுவம் இலங்கையில் நிலைகொள்ளும் உடன்படிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை சந்தித்தார். SOFA மற்றும் அமெரிக்க இராணுவம் இலங்கையில் நிலைகொள்வதற்கான உடன்படிக்கைகளுக்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைச்சரவைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியதாக இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க வேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறு செய்யாமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என கூறினார். மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என கூறப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இரண்டு மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.