நோய்த்தொற்றுள்ள கறவை பசுக்களை இறக்குமதி செய்த அமைச்சு: கால்நடை வைத்திய அதிகாரி சாட்சியம்

by Staff Writer 26-06-2019 | 7:36 PM
Colombo (News 1st) கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கறவை பசுக்களை கொள்வனவு செய்த போது இடம்பெற்ற குளறுபடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக இன்று (26) மஸ்கெலியா கால்நடை வைத்திய அதிகாரி தேசப்பிரிய சேனாதீர சாட்சியம் வழங்கினார். மஸ்கெலியாவின் தனியார் பண்ணையொன்றில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கறவை பசுக்களில் Mycoplasma Bovis என்ற நோய் அடையாளங்காணப்பட்டதாக மஸ்கெலியா கால்நடை வைத்திய அதிகாரி தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்வதற்கு முன்னரே கறவை பசுக்கள் அந்நோய்த் தொற்றுக்குள்ளாகியிருந்ததாக உறுதியாகியுள்ளது. இந்நோய்க்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், இவ்வாறான நோய்த்தொற்றுக்குள்ளான கால்நடைகளை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் கொன்று விடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த பசுக்களையும் கொன்று விடுமாறு தனக்கு ஆலோசனை கிடைத்ததாக மஸ்கெலியா கால்டை வைத்திய அதிகாரி தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். நோய்த்தொற்றுக்குள்ளான பசுக்களின் நிழற்படங்களையும் காணொளிகளையும் அவர் ஆணைக்குழு முன்பாக காண்பித்து சாட்சியமளித்துள்ளார். இது தொடர்பிலான மேலதிக சாட்சி விசாரணை அடுத்த மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை விருத்தி பிரிவின் தலைமை அதிகாரி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.