கிளிநொச்சி ரயில் விபத்தில் அறுவர் பலி: பாதுகாப்பு சமிக்ஞை கட்டமைப்பு செயற்படாதது காரணமா?

by Staff Writer 26-06-2019 | 7:07 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - முறிகண்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் நேற்று (25) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் 1.45 அளவில் கொழும்பில் இருந்த காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த யாழ். தேவி கடுகதி ரயிலில் இராணுவத்தினர் பயணித்த லொறியொன்று மோதி விபத்திற்குள்ளானது. விபத்தில் சிக்கிய இராணுவ சிப்பாய்கள் ஐவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு இராணுவ சிப்பாய் நேற்றிரவு உயிரிழந்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். விபத்தில் காயமடைந்த மற்றுமொரு இராணுவ சிப்பாய் தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். விபத்து இடம்பெறும் போது குறித்த லொறியில் இராணுவத்தினர் 7 பேர் பயணித்துள்ளனர். இந்த ரயில் கடவையின் பாதுகாப்பு சமிக்ஞை கட்டமைப்பு தொழிற்பட்டதா என்பதில் சந்தேகம் நிலவுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நேற்று குறிப்பிட்டார். நேற்று விபத்து இடம்பெற்ற கிளிநொச்சி மற்றும் முறிகண்டிக்கு இடைப்பட்ட 55ஆம் கட்டை பகுதி ரயில் கடவையின் சமிக்ஞை இன்று தொழிற்படவில்லை. இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுவதாக மக்கள் குறிப்பிட்டனர். ஆனந்தபுரம், கரடிப்போக்கு மற்றும் கணேசபுரம் பகுதிகளில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன. சில இடங்களில் ரயில் கடவைகள் காணப்பட்ட போதிலும் சமிக்ஞை கட்டமைப்பு உரிய நேரத்தில் தொழிற்படுவதில்லை என மக்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, யாழ். மாவட்டத்தின் பல இடங்களிலும் இவ்வாறான பாதுகாப்பற்ற ரயில் கடவைகளைக் காண முடிகின்றது. யாழ்ப்பாணம் - நெடுங்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகாமையில் தண்டவாளங்கள் காணப்படுகின்ற போதிலும், ரயில் கடவைகள் அமைக்கப்படவில்லை. யாழ்ப்பாணம் - பூம்புகார் பகுதியிலுள்ள ரயில் கடவை சேதமடைந்த நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது. அத்துடன், காவலாளி அறையும் பூட்டப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் ரயில் கடவை அமைக்கப்படாத நிலையில், அதற்காக பொருத்தப்பட்ட சமிக்ஞை கட்டமைப்பு உரிய முறையில் தொழிற்படுவதில்லை என மக்கள் கூறினர். இவ்வாறான பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் தொடர்பில் விரைவில் கவனம் செலுத்த வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பல்லவா?