விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் மக்கள் கவலை

இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகள் பாவனையின்றி இருப்பதாக மக்கள் கவலை

by Staff Writer 26-06-2019 | 2:23 PM
Colombo (News 1st) மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்ட காணிகள் மக்களின் பாவனையின்றி மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கவலை வௌியிட்டுள்ளனர். இராணுவம் நிலைகொண்டிருந்த 1363 ஏக்கர் காணி, கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுவிக்கப்பட்டது. இதனுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் 120 ஏக்கர் உடையார்கட்டு விவசாயப் பண்ணையும் உள்ளடங்குகின்றது. இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட விவசாயப் பண்ணை தற்போது பிரதேச செயலகத்தின் பொறுப்பிலுள்ளது. எனினும் குறித்த காணியைத் தமக்கு பயன்தரும் வகையில் வழங்கவில்லை என மக்கள் கவலை வௌியிடுகின்றனர். பயன்தரு மரங்கள் அதிகமுள்ள இந்தக் காணியை மக்களின் பாவனைக்கு வழங்கும் பட்சத்தில் தமது வாழ்வாதாரம் முன்னேற்றமடையும் என தோராவில் மற்றும் உடையார்கட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மா. பிரதீபனிடம் நியூஸ் பெஸ்ட் வினவியபோது, குறித்த காணி யாருக்கும் உரித்துடையது இல்லை எனவும் இந்தக் காணி மாவட்ட செயலாளர் மூலம் பிரதேச செயலகத்திடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் காணி தொடர்பில் திணைக்களங்கள், உரியதரப்பினர் கோரும் பட்சத்தில் அது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் நியூஸ்பெஸ்டுக்குக் கூறியுள்ளார். காணியில் பயன்தரு மரங்கள் அதிகம் காணப்படுவதால் பராமரிக்கும் பொறுப்பு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்