அடுத்த இரண்டு வாரத்தில் மரண தண்டனையை நிறைவேற்றுவேன்: ஜனாதிபதி உறுதி

by Staff Writer 26-06-2019 | 7:54 PM
Colombo (News 1st) போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொலன்னாவையில் இன்று (26) நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ஜனாதிபதி பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
போதைப்பொருள் ஒழிப்பு தினமான ஜூன் 26 ஆம் திகதியாகிய இன்று மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக நான் கையொப்பமிட்டுள்ளேன். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழலாம். நான் குற்றவாளி என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டலாம். எனினும், இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் முன்வைப்போரின் பின்புலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருப்பது தௌிவானது. அடுத்த இரண்டு வாரத்தில் மரண தண்டனையை நிறைவேற்றுவேன்.
என குறிப்பிட்டார். மேலும், போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுத்த போராட்டத்தை முடக்கும் வகையிலேயே 21 ஆம் திகதி குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டார். எனினும், தாம் முயற்சியை நிறுத்திக்கொள்ள போவதில்லை எனவும் மனசாட்சிக்கு ஏற்பவே செயற்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தினை முன்னிட்டு கடந்த 23 ஆம் திகதியில் இருந்து ஜூலை 1 ஆம் திகதி வரை ஜனாதிபதியினால் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூன்றாம் நாள் நிகழ்வுகளின் பிரதான நிகழ்வு கொலன்னாவை ரஜமகா விஹாரையில் நடைபெற்றது.
  • வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1029 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பாதுகாப்பு தரப்பினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் 20,309 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • 2018 ஆம் ஆண்டு 737 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
  • 2018 ஆம் ஆண்டு 40,987 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • 2017 ஆம் ஆண்டு ஹெரோயின் கடத்தல் தொடர்பில் 29,272 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 278 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டு 27, 458 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 196 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
  • 2015 ஆம் ஆண்டு 40 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 26 ,047 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.