பிரேஸிலின் லூலா த சில்வாவின் பிணை கோரிக்கை மறுப்பு

பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி லூலா த சில்வாவின் பிணை கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

by Staff Writer 26-06-2019 | 12:04 PM
Colombo (News 1st) பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி லூய்ஸ் இனாசியோ லூலா த சில்வாவின் (Luiz Inácio Lula da Silva) பிணை கோரிக்கை அந்நாட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டினால் 12 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள லூலா த சில்வா, தமக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார். எனினும், மேன்முறையீடு தொடர்பிலான தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் தாமதப்படுத்தியுள்ளது. அத்துடன், 73 வயதான லூலா த சில்வாவின் பிணைக் கோரிக்கையையும் நிராகரித்து, வழக்கு விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது. எவ்வாறாயினும் இந்த நடவடிக்கைகளானது அரசியல் பழிவாங்கல் எனவும் பக்கச்சார்பானவை எனவும் லூலா த சில்வா சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் வாதிட்டுள்ளார். இதேவேளை, லூலா த சில்வாவிற்கு ஏற்கனவே, 2 ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 6 குற்றச்சாட்டுக்களுக்கான தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.