விசா அற்ற வௌிநாட்டவர்களை நாடு கடத்த நடவடிக்கை

விசா அற்ற வௌிநாட்டவர்களை நாடு கடத்த நடவடிக்கை

by Staff Writer 25-06-2019 | 10:55 AM
Colombo (News 1st) விசா காலம் நிறைவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டுப் பிரஜைகள் 152 பேரை உடனடியாக நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. செல்லுபடியாகும் விசாயின்றி நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டுப் பிரஜைகள் தற்போது மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கயான் மிலிந்த தெரிவித்துள்ளார். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில், நைஜீரிய பிரஜைகள் 63 பேர் பாகிஸ்தான் பிரஜைகள் 41 பேர் இந்தியர்கள் 27 பேர் பங்களாதேஷ் பிரஜைகள் 9 பேர் சீன பிரஜைகள் 3 பேர் கனேடியர் ஒருவர் ஜேர்மன் பிரஜை ஒருவர் மாலைதீவு பிரஜைகள் 2 பேர் கொரிய நாட்டவர் ஒருவர் பப்புவா நியூகினிய பிரஜை ஒருவர் மோல்டா நாட்டவர் மற்றும் மலேஷிய பிரஜைகள் இருவரும் அடங்குவதாகக் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நைஜீரியர்களை விசேட விமானத்தில் நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதியைத் துரிதமாகப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கயான் மிலிந்த கூறியுள்ளார். நிதி ​மோசடிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் நைஜீரிய பிரஜைகள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் நாட்டுக்கு வருகைதரும் நைஜீரியர்கள் விசா கோரும்போது கூடிய கவனம் செலுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். இதனிடையே, விசா காலம் நிறைவடைந்தும் நாட்டில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களின் எண்ணிக்கை 6782 ஆக பதிவாகியுள்ளது. இதில் 1670 பேர் இலங்கையில் புகலிடம் கோரியுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கயான் மிலிந்த தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், குறிப்பிட்ட விசா காலத்துக்குள் நாட்டில் தங்கியுள்ளவர்களைக் கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.