by Staff Writer 25-06-2019 | 7:54 PM
Colombo (News 1st) வட மாகாண தொண்டர் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.
வட மாகாணத்தை சேர்ந்த தொண்டர் ஆசிரியர் ஒரு தொகுதியினருக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வட மாகாண கல்வி அமைச்சினால் நிரந்தர நியமனம் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் நேற்றைய தினம் (24) வட மாகாண அமைச்சின் முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
பின்னர் கவனயீர்ப்பு போராட்டம் உண்ணாவிரதப் போராட்டமாக வலுப்பெற்றது.
இன்று காலை கல்வி அமைச்சின் பிரதான வாயிலை மூடி ஊழியர்களை உள்நுழைய விடாமல் போராட்டக்காரர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
இதன்போது, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் குறித்த இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை.
பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வௌியேறுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.
பின்னர் 5 மாவட்டங்களிலும் இருந்து தலா 2 பேருக்கு பேச்சுவார்த்தைக்கு கல்வி அமைச்சின் செயலாளர் அழைப்பு விடுத்தார்.
பேச்சுவார்த்தையின் பிரகாரம், கல்வி வலயங்களுக்கு பெயர்ப்பட்டியலை அனுப்பி சரிபார்த்து எதிர்வரும் 15 ஆம் திகதி நேர்முகத் தேர்விற்கு அழைக்கவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் குறிப்பிட்டார்.