ரெஜினா கொலையுண்டு ஒரு வருடம்: வினைத்திறனற்று நீளும் விசாரணைகள்

by Bella Dalima 25-06-2019 | 8:08 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலத்தைச் சேர்ந்த சிவனேஸ்வரன்  ரெஜினாவின் பெயரை அத்துணை எளிதில் எவரும் மறந்துவிட முடியாது. அந்த பிஞ்சின் உயிர் காவுகொள்ளப்பட்டு இன்றுடன் ஒரு வருடமாகின்றது. 6 வயதான சிறுமி ரெஜினாவை இழந்த சோகம் அவளின் குடும்பத்தினரின் முகங்களிலிருந்து இன்னும் மறையவில்லை. புகைப்படங்கள், சான்றிதழ்கள், தான் வரைந்த ஓவியங்களூடாக ரெஜினா இந்த வீட்டில் இன்னும் வாழ்கிறாள். காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சின்னஞ்சிறார்களுடன் ஓடி விளையாடியிருக்க வேண்டிய ரெஜினா இன்றில்லை. காட்டுப்புலத்தில் வறிய குடும்பத்தில் பிறந்த ரெஜினாவின் உயிர் காவுகொள்ளப்பட்ட அந்த இடத்தில் பல மர்மங்கள் இன்றும் நிறைந்து கிடக்கின்றன. பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட நிலையில் ரெஜினாவின் சடலம் மீட்கப்பட்டது. கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. எனினும், பொலிஸ் தரப்பு விசாரணைகள் முற்றுப்பெறவில்லை என சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்தார். இந்த வழக்கில் பொலிஸாரின் வினைத்திறன் போதுமான அளவு இல்லை என அவர் குற்றம் சாட்டினார்.