மீள செலுத்தப்படாத கடன் தொடர்பில் வௌிக்கொணர்வு

மக்கள் வங்கியின் மீள செலுத்தப்படாத கடன் தொடர்பில் வௌிக்கொணர்வு

by Staff Writer 25-06-2019 | 8:35 AM
Colombo (News 1st) மக்கள் வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு, மீள செலுத்தப்படாத கடன் தொடர்பில் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. 1961ஆம் ஆண்டு 9ஆம் இலக்க மக்கள் வங்கி சட்டத்தைத் திருத்துவதற்கு கடந்த மே மாதம் 24ஆம் திகதி நிதியமைச்சு பிரேரரணை முன்வைத்தது. இதனூடாக, மக்கள் வங்கியை தனியார் மயப்படுத்துவதற்கு தயாராகுவதாக மக்கள் விடுதலை முன்னணி நேற்று தெரிவித்தது. இந்தப் பின்புலத்திலேயே, மக்கள் வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு மீள செலுத்தப்படாத கடன் தொடர்பில் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான டபிள்யூ எம். மென்டிஸ் நிறுவனம் மாத்திரம் மக்கள் வங்கிக்கு 2,912 பில்லியனை செலுத்த வேண்டும். அதாவது 291 கோடி ரூபாவை அந்த நிறுவனம் மக்கள் வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது. மேலும் 25 மில்லியனை அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 5 மில்லியன் ரூபா எனும் வரையறைக்கு அதிமாகப் பெறப்பட்டு இதுவரை செலுத்தப்படாதுள்ள கடன் தொகை, 3,146 கோடி ரூபாவாகும். கடந்த காலங்களில் கடன் வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, அவர்களுக்கு அரசியல் அனுசரணை குறைவில்லாமல் கிடைத்துள்ளமையை காணமுடிகின்றது. இந்த நிறுவனங்களில் டபிள்யூ எம். மென்டிஸ் நிறுவனம் பெருந்தொகை கடனை இதுவரை செலுத்தாமல் உள்ளது. முறிகள் மோசடி மூலம் ஊழியர் சேமலாப நிதிக்கு 8,500 மில்லியனுக்கும் அதிக நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக அது குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்தது. அத்துடன், பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனம் ஏற்படுத்திய நட்டத்தின் பெறுமதி 17,000 மில்லியன் ரூபாவாகும். இவ்வாறு பாரிய முறிகள் கொடுக்கல் வாங்கல் மூலம் நட்டத்தை ஏற்படுத்திய பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டபிள்யூ எம்.மென்டிஸ் நிறுவனம், மக்கள் வங்கிக்கு மாத்திரம் 290 கோடி ரூபாவை செலுத்தாமலுள்ளது. இதேவேளை, மக்கள் வங்கியின் முன்னாள் தலைவர் ஹேமசிறி பெர்ணான்டோ அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததாக தகவல்கள் வௌியானபோதிலும் அவர் தொடர்ந்தும் மக்கள் வங்கியின் துணை நிறுவனமொன்றில் உயர்பதவி வகிப்பது, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வினவியபோது தெரியவந்தது. கடந்த காலங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட வர்த்தகரான ஜெஹான் அமரதுங்க செயற்பட்ட விதமும் இங்கு குறிப்பிடத்தக்கது. மக்கள் வங்கியின் நிதிச் சட்டத்திற்கு ஏற்ப, சாதாரண பொது மக்களின் நிதியை பாதுகாக்கும் நிறுவனமாக மக்கள் வங்கி காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி 1,957 கோடியாகக் காணப்பட்ட செலுத்தப்படாத கடன் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி 3,145 கோடி வரை எவ்வாறு உயர்வடைந்தது? இவ்வாறான நிலைமையை உருவாக்கியது யார்? இது மக்கள் வங்கியை தனியார் மயப்படுத்துவதற்கு அரசியல்வாதிகள் பயன்படுத்திய உபாயமா?