முன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

25 Jun, 2019 | 7:28 pm

Colombo (News 1st) முன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளர் சதகத்துல்லா ஹில்மி-க்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து, முன்னாள் பிரதேச செயலாளருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி திருகோணமலை பிராந்திய சுகாதார உதவி பணிப்பாளராகக் கடமையாற்றிய போது, அங்கு பணியாற்றிய பெண் ஒருவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி கொலை செய்ததாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சம்பவ தினத்தன்று வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, பிரதேச செயலாளர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டியதாக உயிரிழப்பதற்கு முன்னதாக குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரண வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

விசாரணைகளின் போது குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ,000 ரூபா அபராதமும் விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாத கடூழிய சிறைதண்டனை விதிக்குமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகனுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்ட ஈடு வழங்குமாறும் குற்றவாளிக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதனை வழங்காவிட்டால் மேலும் ஒரு வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்