by Staff Writer 24-06-2019 | 3:00 PM
Colombo (News 1st) கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் அடுத்த மாதம் 31ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உயர்நீதிமன்றம் இன்று (24ஆம் திகதி) தீர்மானித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் எஸ். துரைராஜா ஆகியோரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கட்டாய விடுமுறையை இரத்து செய்யும் இடைக்கால தடையுத்தரவை கோரி, பூஜித் ஜயசுந்தர இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
தம்மை மீண்டும் சேவையில் அமர்த்துமாறு அவர் இந்த மனுவில் கோரியுள்ளார்.
நியாயமான காரணமின்றி தமக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டதன் மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் பூஜித் ஜயசுந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட சந்தர்ப்பத்தில் பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரசதரப்பு சட்டத்தரணியும் உயர்நீதிமன்றத்தில் தமது தரப்பு விளக்கங்களை முன்வைத்தனர்.
மனுவில் குறிப்பிடப்பட்டவாறு, மனுதாரருக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதா? அந்த அதிகாரம் ஜனாதிபதியால் உரியவகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆராய்ந்து, எதிர்வரும் விசாரணையின்போது, மனுதாரரின் கோரிக்கைக்கு இணங்க மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என இதன்போது உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமின் தலைமை நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன சுட்டிக்காட்யுள்ளார்.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, சட்டமா அதிபர், அரச புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
நிலந்த ஜயவர்தன மற்றும் சிசிர மென்டிஸ் ஆகியோர் இந்த மனு தொடர்பில் அடிப்படை ஆட்சேபனையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள போதிலும் அதற்கான சத்தியக்கடதாசிகள் இதுவரை நீதியரசர்கள் குழாமிற்கு கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஒக்டோபர் மாதம் முதல் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது போனதாக பூஜித் ஜயசுந்தர தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அலோசனைகள் தொடர்பில் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவிற்கு அறிவித்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு நேரடியாக ஜனாதிபதிக்கு அறிக்கையிடுமாறு உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் 2019 ஏப்ரல் 9ஆம் திகதி நடைபெற்ற புலனாய்வு தொடர்பிலான கூட்டத்திலேயே தாம் அறிந்து கொண்டதாக பூஜித் ஜயசுந்தரவின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனையடுத்து புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ், எழுத்துமூலம் தமக்கு அறிவித்ததாகவும் மேலதிக நடவடிக்கைகளுக்காக அந்த கடிதத்தை 4 உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியதாகவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.