ஆப்கானுடனான போட்டியில் இந்தியா வெற்றி

ஆப்கானுடனான போட்டியில் இந்தியா வெற்றி

by Staff Writer 23-06-2019 | 7:53 AM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் மொஹமட் ஷமியின் ஹெட்ரின் சாதனையுடன் இந்திய அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 12ஆவது உலகக்கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்றது. ஆப்கானிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சினால், இந்திய அணி ஓட்டங்களை குவிப்பதில் சற்று தடுமாறியது. ரோஹித் ஷர்மா ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அணித்தலைவர் விராட் கோஹ்லி, ஒருநாள் அரங்கில் 52ஆவது அரைச்சதத்தை பூர்த்திசெய்து 67 ஓட்டங்களுடன் வௌியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹேந்திர சிங் தோனி 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, கேதர் ஜாதவ் 52 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் மொஹமட் நபி மற்றும் குல்படின் நைப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 225 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் முதல் விக்கெட் 6ஆவது ஓவரில் வீழ்த்தப்பட்டது. மொஹமட் நபி அணிசார்பில் அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், மொஹமட் ஷமியின் பந்துவீச்சில் மொஹமட் நபி ஆட்டமிழக்க, அப்தாப் அலாம் 4 ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். மீண்டும் மொஹமட் ஷமியின், 5ஆவது பந்தில் முஜிப் ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் அணி, சகல விக்கெட்களையும் இழந்து 213 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது. இதன்மூலம் உலகக்கிண்ண போட்டியில் ஹெட்ரிக் விக்கெட்களை வீழ்த்திய 2 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் பெற்றுக் கொண்டார். போட்டியில் மொஹமட் ஷமி 4 விக்கெட்களையும் பும்ரா, சஹால், மற்றும் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் உலகக்கிண்ண வரலாற்றில் தனது 50ஆவது வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது. இதேவேளை, நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் நியூஸிலாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில், வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி 11 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.