ஜனாதிபதி, பிரதமரை விசாரணைக்கு அழைக்க பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தீர்மானம்

by Staff Writer 22-06-2019 | 3:53 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவினால் விசாரணைகளுக்காக அழைக்கப்படவுள்ளவர்களின் பட்டியலில் பிரதமர் உள்ளிட்ட சில அமைச்சர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழு முன்பாக அழைக்கப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எனினும், ஜனாதிபதியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்படும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதேவேளை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவையும் விசாரணைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சிற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்னாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோரையும் தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது. எனினும், அன்றைய தினத்தில் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளவர்கள் யார் என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என பிரதி சபாநாயகர் ஆனந்தகுமாரசிறி குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய அல்லது அதில் தாக்கம் செலுத்தக்கூடியதாகக் கருதப்படும் வாக்குமூல பதிவுகளின் போது அதனை ஊடகங்களூடாக நேரடியாக பகிரங்கப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எனினும், ஏனைய அனைத்து சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இதேவேளை, பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் வாக்குமூல பதிவுகள் அடுத்த மாதம் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வாக்குமூல பதிவின் முழுமையான அறிக்கையை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக விசேட தெரிவுக்குழுவின் தலைவர் , பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்