திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஒரு பில்லியன் யென் உதவித்தொகை வழங்க ஜப்பான் இணக்கம்

by Staff Writer 22-06-2019 | 7:38 PM
Colombo (News 1st) திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்காக ஜப்பான் அரசாங்கம் ஒரு பில்லியன் யென்னை (yen) வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் கலாநிதி Hiroto Izumi, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் அலரி மாளிகையில் நேற்று (21) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமைத்துவத்தை ஜப்பான், இந்தியா, இலங்கை இணைந்து மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தினை விஸ்தரிக்கும் செயற்பாட்டிற்கு உதவி புரிவதற்கு இதன்போது ஜப்பான் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் உதவியுடன் LNG மின் உற்பத்தி நிலையம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து சமுத்திர வலயத்தின் இலவச போக்குவரத்து செயற்பாடுகள் தொடர்பிலும் இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில் பிரதமருடன் அமைச்சர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, சாகல ரத்நாயக்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். எனினும், இந்த கலந்துரையாடலில் வௌிவிவகார அமைச்சரோ, அவரது பிரதிநிதி ஒருவரோ கலந்துகொண்டதாக பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இந்த கலந்துரையாடலில் திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கான ஒரு பில்லியன் யென்னை வழங்குவது தொடர்பில் ஜப்பான் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்ததாக 'த ஐலண்ட்' பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டுள்ளது. உதவித்தொகையாக அது கிடைப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.