கொழும்பில் பாதாள உலகக் குழுவினரே மணல் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்: ஜனாதிபதி

by Staff Writer 22-06-2019 | 8:21 PM
Colombo (News 1st) பசுமை மணல் இறங்குதுறை திட்டத்தினை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. ஆறுகள் மற்றும் நீர் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மணல் அகழ்விற்கான தரத்தினை அறிமுகம் செய்தல் இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஆறுகளில் இருந்து 10 அடி பிரதேசம் பசுமை வலயமாக பெயரிடப்பட்டு மரங்கள் நடப்படவுள்ளன. இந்நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்ததாவது,
இலங்கையில் மணல் வியாபாரம் ஊழல் மிக்கதாகக் காணப்படுகின்றது. கொழும்பில் பாதாள உலகக் குழுவினரே மணல் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். மணல் அகழும் இடங்களுடன் குற்றவாளிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். நாம் எந்த சிறந்த விடயத்தினை செய்தாலும் அதனை பொலன்னறுவை மன்னம்பிட்டியில் செயற்படுத்த முடியாது. டிப்பர் சங்கம் , டிப்பர் சாரதிகள் சங்கம் சிலவேளை சட்டத்திற்கு முரணாக செயற்படுகின்றனர். இலங்கையில் மணல்அகழும் செயற்பாடு உரிய முறையில் இடம்பெறுவதில்லை. நாட்டில் இயற்கை வளங்களை பாதுகாத்து அதனை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அதனடிப்படையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.