கல்முனையில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

by Staff Writer 22-06-2019 | 8:07 PM
Colombo (News 1st) கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது. எனினும், தீர்வு கிட்டும் வரை சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த வேண்டாம் என கோரி கல்முனையில் மூன்றாவது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டம் இடம்பெற்று வருகின்றது. அம்பாறை - கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் ஆறாவது நாளாகவும் இன்று நண்பகல் வரை முன்னெடுக்கப்பட்டது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெருந்திரளான மக்கள் இன்றும் வருகை தந்திருந்தனர். அரசியல்வாதிகளும் சம்பவ இடத்திற்கு இன்று வருகை தந்திருந்தனர். பின்னர் உண்ணாவிரதத்தை கைவிட்டவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சாகும் வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களில் நால்வர் சுழற்சி முறையிலான நீராகார உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதேவேளை, கல்முனை போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் காரைத்தீவு பிரதேச சபைக்கு முன்பாக நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் காரைத்தீவு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட நால்வர் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதேவேளை, மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது. கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள் ,பொது மக்கள் இணைந்து இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வல்வெட்டித்துறை பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதேவேளை, தமிழர் சமூக ஜனநாயக் கட்சியின் ஏற்பாட்டில் திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாம் என கோரி கல்முனையில் இன்று மூன்றாவது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கல்முனை தனியார் பஸ் நிலைய முன்றலில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா நேற்றிரவு கலந்து கொண்டிருந்தார். போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக இன்றும் மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படும் இடத்திற்கு சென்றிருந்தனர்.