இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2019 | 4:35 pm

Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

லீட்ஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 233 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 232 ஓட்டங்களைப் பெற்றது.

இளம் வீரரான அவிஷ்க பெர்னாண்டோ அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 49 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 46 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

முன்னாள் அணித்தலைவரான அஞ்சலோ மெத்யூஸ் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடி 85 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று அணியை வலுப்படுத்தினார்.

ஜொஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஆதில் ரஷிட் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இலகுவான இலக்கான 233 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரில் இரண்டாவது பந்தில் முதல் விக்கெட்டை இழந்தது.

லசித் மாலிங்கவின் அபார பந்துவீச்சில் ஜொனி பெயார்ஸ்டோ ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஜேம்ஸ் வின்ஸ் 14 ஓட்டங்களுடன் லசித் மாலிங்கவின் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

அதனைத் தொடர்ந்து இணைந்த ஜோ ரூட் மற்றும் அணித்தலைவர் ஒயின் மோர்கன் ஜோடி அணியை மீட்டெடுக்கப்போராடினாலும் ஒயின் மோகன் 21 ஓட்டங்களுடன் இசுறு உதானவின் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்து வௌியேறினார்.

அதனைத் தொடர்ந்து ஜோ ரூட், ஜொஸ் பட்லர் ஆகியோரும் மலிங்கவின் அபார பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

தனஞ்சய டி சில்வாவின் ஓர் ஓவரில் இரண்டு விக்கட்டுக்கள் வீழ்த்தப்பட இலங்கை அணியின் வெற்றி ஓரளவு உறுதியானது.

இருப்பினும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற பென் ஸ்ரொக்ஸ் இலங்கை அணிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

வெற்றிக்காக போராடிய அவர் இறுதி நேரத்திலும் அதிரடியாக துடுப்பெடுத்தாடினார்.

4 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகளுடன் அவர் 82 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றாலும், இறுதி விக்கெட்டாக மார்க் வுட் வீழ்த்தப்பட இலங்கை அணி 20 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

பந்துவீச்சில் லசித் மாலிங்க 4 விக்கெட்களையும், தனஞ்சய டி சில்வா 3 விக்கெட்களையும், இசுறு உதான 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதினை லசித் மாலிங்க தம்வசப்படுத்தினார்.

உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி தொடர்ச்சியாக 20 ஆண்டுகளாக இங்கிலாந்தை வெற்றிகொள்ளும் சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்