Batticaloa Campus-ஐ அரசாங்கத்தின் பொறுப்பில் கொண்டு வருமாறு பரிந்துரை

by Staff Writer 21-06-2019 | 3:29 PM
Colombo (News 1st) Batticaloa Campus நிறுவனத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் பொறுப்பில் கொண்டு வருவதற்கு கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பிலான துறைசார் மேற்பார்வைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பிலான அறிக்கையை குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன்போது, ஆஷூ மாரசிங்க தெரிவித்ததாவது,
இந்த நிறுவனத்திற்கு நிதி சட்டவிரோதமாகக் கிடைத்துள்ளதாலும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிக்கு மேலதிகமாக சட்டவிரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாலும், Batticaloa Campus நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் கட்டடங்களை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருமாறும் அவற்றை கிழக்கு பல்கலைக்கழகத்தின் மண்டபமாக பயன்படுத்துமாறும் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பிலான துறைசார் மேற்பார்வைக்குழு பரிந்துரை செய்கின்றது. அதன் பிரகாரம், கிழக்கு பல்கலைக்கழகத்தை வசதிகள் கொண்ட தேசிய பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்ய முடியும். நூதன தொழில்நுட்பம் தொடர்பான பாடநெறிக்காகவும் சுற்றுலாத்துறை தொடர்பில் கற்பிப்பதற்கும் இதனை பயன்படுத்துமாறு இந்த குழு பரிந்துரை செய்கின்றது. இந்த பல்கலைக்கழகத்திற்கு நிதி சேகரித்தமை, காணியை கையகப்படுத்தியமை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை. இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் சிறைச்சாலைகளிலேயே இருக்க வேண்டும். ஆகவே, நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டு, அவசர சட்டத்தின் கீழ் இந்த பல்கலைக்கழகத்தை உடனடியாக அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். இந்த நிறுவனத்திற்கு எவ்வாறு நிதி கிடைத்தது என்பது தொடர்பிலான விசாரணைகளுக்கு சவுதி அரேபிய தூதரகத்தின் ஒத்துழைப்புகளையும் பெற வேண்டும். இதனால் அரசாங்கம், இந்த பல்கலைக்கழகத்தை உடனடியாக பொறுப்பேற்க வேண்டும்.
இதேவேளை, Batticaloa Campus நிறுவனம் என்ற பெயரில் இலங்கை வங்கியில் காணப்பட்ட வங்கி கணக்கிற்கு வௌிநாட்டு கடன் வைப்பிலிடப்படவில்லை என கடந்த 4 வருடங்களாக அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கி தலைமை அலுவலகத்தின் விநியோகப்பிரிவின் முகாமையாளர் W.P. ஜகத் பிரசன்ன நேற்றைய தினம் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்கும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வங்கியின் அனுமதியின்றி எந்தவொரு வௌிநாட்டுக் கடனும் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படாது எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார். Batticaloa Campus நிறுவனத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் வௌிநாட்டு நிறுவனங்களும் பல்வேறு தரப்பினரும் பணம் வைப்பிலிட்டுள்ளதாக ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, Batticaloa Campus நிறுவனத்திற்கு வௌிநாட்டுக் கடன் கிடைக்கப்பெற்றதாக கடந்த வாரம் குறித்த ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரான கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா குறிப்பிட்டிருந்தார். இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.