விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலத்திற்கு வருகிறது

விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலத்திற்கு வருகிறது

by Bella Dalima 21-06-2019 | 4:38 PM
கடனைத் திரும்ப செலுத்தாததால் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரியை ஏலத்தில் விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை சாலி கிராமத்தில் உள்ள கண்ணபிரான் காலனியில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமாக செங்கல்பட்டு அருகே மாமண்டூரில் ‘‘ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி’’ உள்ளது. தே.மு.தி.க. கட்சி பணிகளை நிர்வாகம் செய்வதற்கு கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த்திற்கு கூடுதல் பணம் தேவைப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய செலவுகள் காரணமாக அவர் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி நிலத்தை அடகு வைத்து அவர் கடன் பெற்றார். கல்லூரி பெயரில் உள்ள இடத்திற்கு கடன்கள் வாங்கிய நிலையில், அதற்கு பிணையாக விஜயகாந்த் தனது பெயரிலும், தனது மனைவி பிரேமலதா பெயரிலும் சாலி கிராமத்தில் உள்ள 3 வீடுகளைக் குறிப்பிட்டுள்ளார். ஆண்டாள் அழகர் கல்லூரி பெயரில் அவர் வாங்கிய கடன் மற்றும் வட்டித்தொகை 5 கோடியே 52 இலட்சத்து 73 ஆயிரத்து 825 இந்திய ரூபாவை எட்டியது. இந்த தொகையை கடந்த சில மாதங்களாக விஜயகாந்த் திருப்பி செலுத்தவில்லை. இதையடுத்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதன் பிறகும், விஜயகாந்த் தரப்பில் இருந்து கடன் பாக்கி தொகை மற்றும் வட்டித்தொகை கட்டப்படவில்லை. இதையடுத்து, விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி மற்றும் சாலிகிராமத்தில் உள்ள வீடுகளை ஏலம் விட்டு கடன் பாக்கி மற்றும் வட்டி நிலுவை தொகைகளை வசூலிப்பதற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முடிவு செய்துள்ளது.