ரயில் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

ரயில் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: 10 ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டன

by Staff Writer 21-06-2019 | 3:42 PM
Colombo (News 1st) ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்ற போதிலும் இன்று காலை அலுவலக ரயில் உள்ளிட்ட 10 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வார நாட்களில் அலுவலக ரயில்கள் உள்ளிட்ட 70 ரயில்கள் சேவையில் ஈடுபடுகின்ற போதிலும், இன்று 9 ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார். இதன் பிரகாரம், கரையோர மார்க்கம், வட மார்க்கம், மலையகம், சிலாபம் வீதி, களனி வீதி உள்ளிட்ட அனைத்து ரயில் மார்க்கங்களும் உள்ளடங்கும் வகையில் ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். எனினும், ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் இன்று காலை பயணிக்கவிருந்த 40 ரயில்கள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியது. ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ஓய்வு பெற்ற அதிகாரிகளைத் தாம் சேவைக்கு அழைத்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார். ரயில் சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் ரயில் கண்காணிப்பு முகாமையாளர்கள் நேற்று (20) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் பயணிகளின் நலன் கருதி விசேட ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது. இதனை முன்னிட்டு அனைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் தலைவர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டார். அத்துடன், அனைத்து பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.