மனித புதைகுழி அறிக்கையை சமர்ப்பிப்பதில் தாமதம்

மன்னார் மனித புதைகுழி தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தாமதம்

by Staff Writer 21-06-2019 | 3:58 PM
Colombo (News 1st) மன்னார் மனித புதைகுழி தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கை மேலும் ஒரு மாதம் தாமதமடைந்துள்ளது. அறிக்கைக்கு தேவையான, அகழ்வின் போது எடுக்கப்பட்ட புராதன பொருட்களை நீதிமன்ற அனுமதியுடன் பெறுவதில் தாமதம் நிலவுவதாக சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார். அகழ்வின் போது எடுக்கப்பட்ட புராதன பொருட்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை எதிர்வரும 31 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், தேவையான பொருட்கள் எதிர்வரும் 27 ஆம் திகதியே நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொருட்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அவர் கூறினார். மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பில் பெறப்பட்ட அமெரிக்காவின் கார்பன் கால நிர்ணய அறிக்கையின் பிரகாரம் இந்த தீர்மானம் எட்டப்பட்டது. அகழ்வுப் பணிகளின் போது 355 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.