கிழக்கு வானில் மழை வருமா?

கிழக்கு வானில் மழை வருமா?

by Bella Dalima 21-06-2019 | 7:43 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். வறட்சியின் கோரத்தாண்டவத்தால் வட, கிழக்கு மாகாணங்கள் மாத்திரமின்றி நாட்டின் மொத்த வருமான வீதமும் ஆட்டம் காணும் நிலை உருவாகி வருகின்றது. நாட்டின் மொத்த விவசாய உற்பத்தியில் 25 வீத பங்களிப்பையும் தேசிய பால் உற்பத்தியில் 21 வீத பங்களிப்பையும் தேசிய மீன் உற்பத்தியில் 17 வீத பங்களிப்பையும் கிழக்கு மாகாணம் வழங்கி வருகிறது. கிழக்கு மாகாணத்தின் பிரதான தொழிற்துறையாக விவசாயம் காணப்படுகின்றது. தேசிய உற்பத்தி துறையில் பங்களிப்பு வழங்கும் மூன்று பிரதான தொழில்துறையும் நீரையே நம்பியுள்ளமையால் வறட்சியின் தாக்கம் கிழக்கு மாகாணத்தை அதிகம் பாதித்துள்ளதை மறுக்க முடியாது. நீர் நிரம்பிய நிலையில் பயிர்கள், கால்நடைகளுக்கு வாழ்வளித்து வந்த அம்பாறை சாகாமம் குளத்தின் நீர்மட்டம் வற்றியுள்ள நிலையில், வறட்சி காரணமாக குளத்தின் ஒரு பகுதி முற்றாக வறண்டு போயுள்ளது. குளத்து நீரை நம்பி மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயமும் அழிவடைந்து பயிர்செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்தக் குளத்தை நம்பியே தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரின்றி கருகிப்போயுள்ளதுடன், ஏனைய நிலங்களும் முற்றுமுழுதாக கருகும் நிலை உருவாகி வருகிறது. பாரியளவில் கடன் பெற்றும் தமது நகைகளை அடகு வைத்தும் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு விவசாயம் மேற்கொண்டவர்கள் இன்று எதிர்காலத்தையும் மழையையும் கேள்விக்குறியுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.