கல்முனையில் ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்

by Staff Writer 21-06-2019 | 9:26 PM
Colombo (News 1st) கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கடந்த திங்கட்கிழமை (17) ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரின் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் ஏனையவர்களின் உடல் நிலையும் மோசமடைந்து வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் கண்காணித்து வருகின்றனர். இதேவேளை, சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பெருந்திரளான மக்கள் இன்றும் வருகை தந்திருந்தனர். அமைச்சர்களான மனோ கணேசன், தயாகமகே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கவிந்திரன் கோடீஸ்வரன் ஆகியோரும் இன்று பிற்பகல் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்திருந்தனர். இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்அறிக்கை ஒன்றினை வாசித்தார். அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களை ஏற்றுக்கொள்ளாத மக்கள் அரசியல்வாதிகளை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதேவேளை, மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது. ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் டொக்டர் கோல்டன் பெர்னாண்டோவும் போராட்டத்தில் இன்று இணைந்து கொண்டார்.