தமிழ் - முஸ்லிம் ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும்

கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்திற்கு உடன்பட்டு நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும்: மனோ கணேசன்

by Staff Writer 20-06-2019 | 5:59 PM
Colombo (News 1st) கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் நீண்டகால கோரிக்கைக்கு உடன்பட்டு, தமிழ் - முஸ்லிம் ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளே இதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை அறிக்கையொன்றின் ஊடாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். சாய்ந்தமருது பிரதேசம் தனியொரு பிரதேச செயலகமாக ஏற்கனவே மாற்றப்பட்டுள்ள நிலையில், அதனை கல்முனை மாநகர சபையில் இருந்து முற்றாக பிரித்தெடுத்து நகரசபையாக்குமாறு கோரி, முஸ்லிம் மக்கள் தற்போது போராடி வருவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஒரே இனத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள், கல்முனை மாநகர சபையில் இருந்து முற்றாகப் பிரிந்து, தனி நகர சபை வேண்டும் என போராடும் போது, சகோதர இனத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள், தமது உப பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட வேண்டும் என போராடுவதில் என்ன தவறு இருக்கின்றது என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள், அந்த தவறு என்னவென்பதை நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் தர்க்கரீதியாக எடுத்துக்கூற வேண்டும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து தேசிய பாதுகாப்பு சபையில் நேற்று (19) இரவு கலந்துரையாடப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து நீடிக்க விடுவது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகமாக அமைந்துவிடும் என்பதையும் தெரிவித்ததாக அமைச்சர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தையே முழு பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி கோரிக்கை முன்வைக்கப்படுவதாகவும், இது பிழை என்றால் கிழக்கில் காணப்படும் இன ரீதியான பிரதேச செயலகங்களை, கல்வி வலயங்களை கலைக்க வேண்டும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், அதற்கு இன, மத சாயம் பூசுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது தனக்கு விளங்கவில்லை எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.