by Staff Writer 20-06-2019 | 7:23 AM
ரயில்வே தொழிற்சங்கம் - நிதி அமைச்சர் கலந்துரையாடல்
Colombo (News 1st) ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் இன்று (20ஆம் திகதி) தீர்மானமிகு கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
நிதி அமைச்சில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
நேற்று (19ஆம் திகதி) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று (20ஆம் திகதி) பிற்பகல் 2 மணிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
ரயில் சாரதிகள், ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், ரயில்வே பாதுகாவலர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட 5 தொழிற்சங்கங்களை சேந்தரவர்கள் நேற்று நள்ளிரவு முதல் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்திருந்தனர்.
எனினும், போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பணிப்பகிஷ்கரிப்பை இன்று பிற்பகல் 2 மணி வரை பிற்போட தீர்மானிக்கப்பட்டதாக ரயில்வே லொக்கோமோடிவ் பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்திருந்தார்.
சம்பள முரண்பாடுகள் தொடர்பில் அனுமதி வழங்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் இதுவரை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிர்ப்பு வௌியிட்டே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய நிதி அமைச்சருடன் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலை தொடர்ந்து அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் இந்திக தொடங்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.