கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2019 | 8:12 pm

Colombo (News 1st) கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது.

இதேவேளை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாம் என கோரி கல்முனையில் இன்று சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தினை பிரதேச செயலகமாக தரமுயர்த்தக் கோரி
மதத்தலைவர்கள் உள்ளிட்ட ஐவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக் கோரி பொதுமக்கள் இன்று பேரணியில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சேனைக்குடியிருப்பு – கனக வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த பேரணி சம்பவ இடத்தினை வந்தடைந்தது.

இதேவேளை, மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் நான்கு நாளாக சுழற்சி முறையிலான போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரரும் இன்று காலை கலந்து கொண்டிருந்தார்.

அதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலிய ரத்னதேரர், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் கல்முனையில் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டு வரும் பகுதிக்கு சென்றிருந்தனர்.

அம்பிட்டிய சுமண தேரரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்றிரவு மாபெரும் மெழுகுவர்த்தி பேராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கல்முனை,பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, சேனைக்குடியிருப்பு, மணற்சேனை, துரைவந்தியமேடு, நாவிதன்வெளி மற்றும் காரைத்தீவு ஆகிய பகுதிகளிலும் சம்மாந்துறையின் சில பகுதிகளிலும் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த பகுதிகளில் கடைகள், தனியார் வங்கிகள், சந்தைகள் மூடப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அரச வங்கிகளின் செயற்பாடுகள் இடம்பெற்றதுடன், தனியார் மற்றும் அரச போக்குவரத்துகள் வழமைபோல் இடம்பெற்றன.

இதேவேளை, திருக்கோயில், ஆலையடிவேம்பு வர்த்தக நிலையங்கள், வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி , வந்தாறுமூலை, மயிலம்பாவெளி, தன்னாமுனை ஆகிய பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

ஏறாவூர் பகுதியில் வழமைபோல் செயற்பாடுகள் இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

சித்தாண்டி, கிரான் ஆகிய பகுதிகளிலுள்ள கடைகள் மூடப்பட்டிருந்ததுடன், இந்த பகுதிகளிலுள்ள அரச, தனியார் வங்கிகள் வழமைபோல் இயங்கியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வாழைச்சேனையில் ஒரு சில பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்ததுடன், ஓட்டமாவடி பகுதியில் கடைகள் வழமைபோல் இயங்கியதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பகுதிகளிலும் வழமைபோல் வர்த்தக நிலையங்கள் இயங்கியுள்ளன.

இதேவேளை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாம் என கோரி கல்முனையில் இன்று சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் கல்முனை தனியார் பஸ் நிலைய முன்றலில் இடம்பெற்றது.

இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஹாரீஸ் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்