அரச ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு கூடியது

அரச ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு கூடியது

அரச ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு கூடியது

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2019 | 1:20 pm

Colombo (News 1st) அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இன்று (20ஆம் திகதி) கூடியுள்ளது.

2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

வன பாதுகாப்பு உத்தியோகத்தரான ரஷிகா அபேவீர இன்று ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

விவசாய அமைச்சுக்காக, மாதாந்தம் பாரிய நிதியை செலவிட்டு குத்தகை அடிப்படையில் கட்டடம் ஒன்றைக் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த விசாரணைகளுக்குத் தேவையான வாக்குமூலத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு வழங்குமாறு, விவசாய அமைச்சின் தலைமை கணக்காய்வாளர் நிலூகா ஜயசிங்கவிற்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜகிரிய – ஸ்ரீ ஜயவர்தனபுர வீதியில் அமைந்துள்ள விவசாய அமைச்சுக்கான கட்டடத்தை மாதாந்தம் 21 மில்லியன் ரூபா வாடகைக்கு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை சட்டரீதியாக அரசு பொறுப்பேற்காது, அரசநிதி விரயமாக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிக்க, மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளரும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை சட்டரீதியாக அரசு பொறுப்பேற்காது, அரசநிதி செலவிடப்படுவதாக அரச வைத்தியர்கள் சங்கத்தின் செயலாளர், டொக்டர் ஹரித அளுத்கே முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கல்வி அமைச்சினூடாக பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப்களை பெற்றுக் கொடுப்பதனூடாக ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான முறைப்பாடும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாட்டிற்குத் தேவையான வாக்குமூலத்தை வழங்குமாறு, ஜனாதிபதி செயலணியின் கொள்கைவகுப்பு மேன்முறையீட்டு சபையின் தலைவர் கே.ஏ. சோமசிறி குணசேகரவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்