அமெரிக்க வரலாற்றில் பாரிய தொகை கொக்கைன் மீட்பு

அமெரிக்காவில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கைன் மீட்பு

by Staff Writer 19-06-2019 | 8:12 AM
Colombo (News 1st) அமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) நகரில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் நேற்று (18ஆம் திகதி) கைப்பற்றப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சந்தர்ப்பம் இதுவென அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது. 16.5 தொன் எடையுடைய கொக்கைன் போதைப்பொருள் பிலடெல்பியா பகுதியில் கப்பலொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 7 கொள்கலன்களில் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளதுடன் பிலடெல்பியா பிராந்திய நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கப்பல் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கப்பலில் போதைப்பொருள் ஏற்றப்பட்டமை தொடர்பில் அவர்கள் சாட்சி வழங்கியுள்ளனர். பெருந்தொகை போதைப்பொருள் பல மில்லியன் மக்களை கொல்லக்கூடியது என பிலடெல்பியா சட்டத்தரணி வில்லியம் மெக் சுவைன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இவ்வாறு கொக்கைன் கைப்பற்றப்பட்ட குறித்த கப்பல் கடந்த மாதத்தில் சிலி, பெரு, கொலம்பியா மற்றும் பனாமா ஆகிய நாடுகளில் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.