பாராளுமன்ற செயற்பாடுகளில் சர்வதேச தலையீடுகள்

பாராளுமன்ற செயற்பாடுகளில் சர்வதேச தலையீடுகள்

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2019 | 7:53 pm

Colombo (News 1st) நாட்டின் பாராளுமன்ற செயற்பாடுகளில் மேற்கொள்ளப்படும் சர்வதேச தலையீடுகள் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் தகவல்களை வௌியிட்டு வருகிறது.

வௌிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரசாத் காரியவசம், சர்வதேச நிறுவனமொன்றிடம் இருந்து சம்பளம் பெற்று, சபாநாயகரின் ஆலோசகராக சேவையாற்றுகின்றமை அண்மையில் பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.

அமெரிக்க இரகசிய உளவு சேவையான CIA அமைப்பின் முன்னிலை நிறுவனமான Development Alternatives Incorporated என்ற DAI நிறுவனம் இதன் பின்னணியில் இருக்கின்றமையை நேற்று (18) நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது.

காரியவசத்தின் உறவினர்கள் சில தசாப்தங்களாக வொஷிங்டனில் வசித்து வருகின்மை யாவரும் அறிந்த உண்மையாகும்.

இவ்வாறான நபர்களை இணைத்து, பாராளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கு சபாநாயகர் தலையீடு செய்தால், நாட்டிற்கும் கட்சிக்கும் துரோகம் இழைத்தவராக மக்கள் அவரை கருதுவதை தடுக்க முடியாது.

கடந்த சில வருடங்களாக பல வகையில் சர்வதேச தலையீடுகள் காணப்பட்டன.

அமெரிக்காவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் UNDP எனப்படும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக, இலங்கையின் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளின் இராஜதந்திரிகள் பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு வருகை தந்து, அறிவுறுத்தும் அபாயம் நாட்டு மக்களுக்கு இரகசியமானதொன்று அல்ல.

பிரசாத் காரியவசம் சம்பளம் பெறும் நிறுவனத்தின் செலவில், 60 – 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை நேற்றைய பாராளுமன்ற அமர்வில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.

இலங்கை செயற்பாடுகளில் தலையீடு செய்யும், இந்த நிறுவனம் தொடர்பில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எழுதப்பட்ட விமர்சனம் இது…

சமாதானம் நிலவிய 1950 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் அரசியல் பொருளாதாரம் தொடர்பில் பாரிய நெருக்கடியை இலங்கை எதிர்நோக்கி வருகின்றது. சரியான இலக்கற்ற, நேர்மையற்ற வகையில் செயற்படும் தமது இயலாமையை காட்சிப்படுத்தும் அரசாங்கமே இலங்கையில் காணப்படுகின்றது. CIA-யின் முன்னிலை அமைப்பான Development Alternatives Incorporated நிறுவனத்திடம் உதவி கோருகின்றமையின் ஊடாக இலங்கை எதிர்நோக்கியுள்ள துயரமான, பாதுகாப்பற்ற நிலை புலப்படுகின்றது.

இந்த ஆபத்தை புரிந்துகொள்வதற்கு நாட்டின் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள மக்கள் பிரநிதிகளுக்கு இயலாமல் போயுள்ளமைக்கான காரணம் என்ன?

அவர்களின் கல்வித் தகைமை இதற்கு காரணமாக இருக்கலாம் என நாட்டு மக்கள் தற்போது ஊகித்துள்ளனர்.

அடுத்த சந்தர்ப்பத்தில் கல்வி தகைமை உயர்ந்த மட்டத்தில் காணப்படும் மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கும் பொறுப்பு உள்ளது.

இந்த அறியாமையின் பாரதூரம் என்னவென்பதை சுட்டிக்காட்டும் விடயம் ஒன்று இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் காணிகளை வௌிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதை மட்டுப்படுத்தி 2014 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தற்போதைய அரசாங்கம் 2018 ஆம் ஆண்டு மாற்றியமைத்தது.

50 வீத பங்குகள் உரித்துடைய வௌிநாட்டு நிறுவனங்கள் காணிகளை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் இதனூடாக வழங்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் இடம்பெறும் காணி கொடுக்கல் வாங்கல்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் வகையில் திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இன்று வௌியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Millennium Challenge Corporation என்ற அமெரிக்க திட்டத்தினூடாக நாட்டின் காணிகளை மறுசீரமைக்கும் போர்வையில் காணிகளைக் கைப்பற்றும் முயற்சி தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகிறது.

ஒரு புறம் நாட்டின் சட்டவாக்க செயற்பாட்டிற்கு நிதி வழங்கி, தலையீடு செய்துள்ளதுடன் மறுபுறம் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி, பாராளுமன்றத்தை நிர்வகிப்பதற்கு முயற்சிக்கும் இந்த வௌிநாட்டு சக்திகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்