நிறைவேற்றப்படாத உறுதிமொழிகள்

by Staff Writer 19-06-2019 | 7:20 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்குவதாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இம்மாத சம்பளத்திலும் அந்தக் கொடுப்பனவு தமக்கு கிடைக்கவில்லையென தோட்டத்தொழிலாளர்கள் தெரிவித்தனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்க கடந்த மார்ச் 27 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதற்காக 1.2 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். எனினும், அமைச்சரவை அனுமதி வழங்கி 4 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் இந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பில் கடந்த 30 ஆம் திகதி தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீரவிடம் வினவிய போது, வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாதத்தில் இருந்து வழங்கப்படும் என குறிப்பிட்டார். நாளையோ அல்லது நாளை மறுதினமோ இந்த கொடுப்பனவு கிடைக்கும் என அமைச்சர் வாக்குறுதி அளித்த போதும், இம்முறை தோட்டத்தொழிலாளர் சம்பளத்திலேனும் அது உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. நிலுவை சம்பளத்தை எதிர்பார்த்திருந்தோம், ஏன் எம்மை அரசாங்கம் ஏமாற்றியது எனும் கேள்வியே தோட்டத் தொழிலாளர்களிடம் எஞ்சி நிற்கின்றது. மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அப்பாவி தோட்டத்தொழிலாளர்களின் 1000 ரூபா நாளாந்த சம்பளப் போராட்டம் முடக்கப்பட்டு, நாளொன்றுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும்? 1000 ரூபாவும் இல்லை 50 ரூபாவும் இல்லை எனும் ஏக்கப் பெருமூச்சோடு கடந்து செல்லும் தோட்டத்தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைப்பது எப்போது?